
விமர்சனம்/ ஹரிஹரவீரமல்லு
இந்தியாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் கோகினுார். இன்னும் சொல்லப்போனால் இன்றைய ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே இருக்கும் கொல்லுார் சுரங்கத்தில்தான் கோகினுார் என்று அழைக்கப்படும் அந்த மிகப்பெரிய வைரம் 16ம் நுாற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வைரமானது திவான்கள், கோல்கொண்டா அரசர், லோடி, முகலாய மன்னர்கள், பெர்சிய மன்னர்கள், பஞ்சாப் ராஜா ஆகியோர் கைகளில் மாறி, கடைசியில் வெள்ளைக்காரர்கள் மூலமாக இங்கிலாந்து சென்றது. இன்றைக்கும் இங்கிலாந்து அரச மணிமகுடத்தில் கம்பீரமாக இருக்கிறது. அந்த வைரம் தங்களுக்குதான் சொந்தம் என இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன.
அந்த வைரம் நமக்கே சொந்தம், அதை மீட்க வேண்டும் என்ற மறைமுக குரலில் ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் எடுத்திருக்கும் படம் ஹரிஹரவீரமல்லு. 16ம் நுாற்றாண்டில் கதை நடக்கிறது. பணக்காரர்களிடம் திருடி, ஏழைகளுக்கு நல்லது செய்கிறார் ஹரிஹரவீரமல்லு என்ற திருடனான பவன்கல்யாண். வைரங்களை திருடுவதில் அவர் எக்ஸ்பர்ட். அதை தெரிந்து கொண்ட திவான் அப்படிப்பட்ட வேலையை கொடுக்கிறார். கோல்கொண்டா ராஜாவுக்கு நாங்கள் அனுப்பும் 12 வைரங்களை திருடி தந்தால், 2 வைரங்கள் உனக்கு என டீல் பேசுகிறார். அந்த திட்டம் தோல்வி அடைய கைதி ஆகிறார் பவன்கல்யாண்.அப்போது அவரிடம் வரும் கோல்கொண்டா ராஜா, ‘டில்லி பாதுஷா அவுரங்கசீப் மயிலாசனத்தில் கோகினுார் வைரம் இருக்கிறது. அது, எங்கள் குடும்ப சொத்து. தை திருடிிக்கொண்டு வர வேண்டும். ஆனா, ரொம்ப ரிஸ்கான வேலை’என திருடனான பவனிடம் டீல் பேசுகிறார். அதை ஏற்ற, சின்ன டீமுடன் டில்லிக்கு புறப்படுகிறார் பவன். அவர் தடைகளை தாண்டி டில்லி சென்றாரா? அவுரங்க சீப்பை சந்தித்தாரா? கோகினுாரை மீட்டாரா என்பது கதை
ஆக் ஷன் பிரியர்களுக்கு படம் பிடிக்கும், காரணம் படத்தில் சில ஆ க்ஷன் காட்சிகள் அபாரம். மசூலிப்பட்டினம் துறைமுகத்தில் வெள்ளைக்காரர்களிடம் இருந்து வைரம் திருடும் ஆக் ஷன் காட்சியில் அறிமுகம் ஆகிறார் பவன்கல்யாண். அந்த சீன்களும், சார்மினார் பின்னணியில் வைரம் திருடும் இன்னொரு ஆக் ஷன் பிளாக்கும், கிளைமாக்சுக்கு முன்னால், ஒரு நகரம் பின்னணியில் ஆன சண்டைக்காட்சிகளும் சூப்பர், அதில் பவன்கல்யாண் கலக்கியிருக்கிறார். இது தவிர, காதல் காட்சிகள், இந்து மதத்துக்கு, சடங்கு, சம்பிரதாயத்துக்கு ஆதரவாக பேசும் காட்சிகளிலும் நன்றாக நடித்து இருக்கிறார். எம்ஜிஆர் பாணியில் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவான காட்சிகள், வசனங்களிலும் ஸ்கோர் செய்கிறார். பஞ்சமி என்ற நாட்டியக்காரியாக வரும் நிதிஅகர்வால் தாராதாரா பாடல் பிரமாதமாக ஆடுகிறார். அப்பாவியாக இருந்து ஒரு இடத்தில் திடீரென மாறி அதிர்ச்சி கொடுக்கிறார். இந்து மதத்தை, சடங்கு, சாஸ்திரங்களை துாக்குபிடிக்கும் குருவாக வருகிறார் சத்யராஜ். இவர்களை தவிர மன்னர் அவுரங்க சீப் ஆக வரும் இந்தி நடிகர் பாபிதியோல் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. குணசேகர், பரமஹம்சா ஒளிப்பதிவு, கீரவாணியின் பின்னணி இசை, பாடல்கள் படத்தை மேலும் அழகாக்குகிறது. தோட்டாதரணியின் ஆர்ட் வொர்க்,அந்த காலத்துக்கு சென்ற பிலீங்கை தருகிறது.
பவன்கல்யாண் நடித்த படம் என்பதால் பல இடங்களில் இந்துத்துவா சார்ந்த வசனங்கள், பல இடங்களில் மாற்றுமத மாறுபட்ட வசனங்கள், காட்சிகள். முதல் ஒன்றரை மணி நேரம் வேகமாக ஓடுகிறது. அப்புறம், டல் அடிக்கிறது. இடைவேளைக்குபின் படத்தில் நிறைய மைனஸ். கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், பவன்கல்யாண் ரசிகர்களுக்கு, இந்துத்துவா ஆதரவு சிந்தனை உள்ளவர்களுக்கு,சரித்திர பட ஆர்வலர்களுக்கு இந்த படம் பிடிக்கும்
மீனாட்சிசுந்தரம்
*//

