விமர்சனம்/ கீனோ
**
பள்ளி மாணவன் கந்தர்வா கனவில் கீனோ என்ற வினோத உருவம் வந்து பயமுறுத்துகிறது. ‘கம் வித் மீ, ஹக் மீ’ என்று மிரட்டுகிறது. நாளடைவில் இரவிலும், பகலிலும் நேரில் வந்து அந்த உருவம் மாணவனை துரத்துகிறது. என்னை விட்டு போ என்று மாணவன் அலறுகிறான். இந்த விஷயம் மாணவன் தந்தைக்கு தெரிய வருகிறது. அவரோ, எந்த உருவமும் இல்லாத நிலையில், எதை பார்த்து மகன் பயப்படுகிறான் என்று யோசிக்கிறார். ஆன்மிக ரீதியாக தீர்வு காண முயற்சிக்கிறார். உங்க வீட்டில் எந்த தீய சக்தியும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். கடைசியில் ஒரு மனநல மருத்துவரை அணுகிறார். அவர் வீட்டுக்கு வந்து நடப்பதை பார்க்கிறார். உண்மையில் கீனோ யார்? பேயா? அல்லது கெட்ட சக்தியா? பிரமையா? அந்த மருத்துவர் எந்த மாதிரியான ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். மாணவன் கீனோ பயத்தில் இருந்து மீண்டானா என்பது ஆர்.கே.திவாகர் இயக்கிய கீனோ படத்தின் கதை
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, எழுத்து, இசை, இயக்கம்
ஆர். கே திவாகர். இவர் கதிர், மிஷ்கின் ஆகியோரிடம் பணியாற்றியவர், இவர் இயக்கிய முதல் படமும் கூட. தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான மூவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ’கீனோ’. படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாணவ விருதை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர். கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தி. இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்.இந்த படத்துக்கும் இவரே எடிட்டிங்
ஒரு நடுத்தர குடும்பம், கார் கம்பெனியில் வேலை செய்யம் அப்பா மகாதாரா பகவத், சொந்த வீடுவாங்கும் ஆசையில் துடிக்கும் ரேணுகா சதீஷ், அவர்களின் டீன் ஏன் மகன் கந்தர்வா என எளிமையாக கதை நகர்கிறது. அப்பாவுக்கு வேலை பறி போகிறது. அம்மா ஆஸ்திரேலியா போகிறார். சூழ்நிலை காரணமாக, ஒரு தனி வீட்டில் அப்பாவும், மகனும் வசிக்கிறார்கள். அப்போது மகனக்கு கீனோ பயம் அதிகரிக்க, அப்பா என்ன செய்கிறார். மனநல மருத்துவர் என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கிறார் என்ற கதையை, அழகாக, அழுத்தமாக, இதுவரை தமிழில் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை தொட்டு சொல்லியிருக்கிறார் இயக்குனர்
அப்பாவாக நடித்த மகாதாரா பகவத், அம்மா ரேணுகா சதீஷ் ஆகியோர் சினிமாத்தனம் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள். வீடு பார்ப்பது, புரோக்கர் டார்ச்சர் சீன்கள் ரசிக்க வைக்கிறது. மகனாக வரும் கந்தர்வா உடல் மொழி, அவர் பயப்படுகிற சீன் அருமை. இவர்களை தவிர மனநல மருத்துவரும் மனதில் நிற்கிறார்கள். வழக்கமான படம் மாதிரி இல்லாமல், மெதுவாக, திருப்பங்களுடன் நகர்கிறது திரைக்கதை . ஆலிவர் டென்னி ஒளிப்பதிவும், இயக்குனர் இசையும் படத்துக்கு பலம். திரைப்பட கல்லுாரி மாணவர்கள் பலர் இணைந்து எடுத்து இருப்பதால், கதையில், படத்தில், கிளைமாக்சில் அவ்வளவு விஷயங்கள்.
கீனோ யார் என்ற பயத்தை ஏற்படுத்தி, கடைசியில் அறிவியல் ரீதியான தீர்வு, விளக்கத்தை கொடுத்து தான் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆர்.கே. திவாகர்.
குறிப்பாக, கடைசியில் கீனோ குறித்த டாக்டரின் விளக்கம், அவர் சொல்லும் தரவுகள், பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.
வழக்கமான மசாலா படமாக இல்லாமல், ஒரு விழிப்புணர்வு படமாக, சஸ்பென்ஸ் திரில்லராக கீனோவை எடுத்து இருக்கிற படக்குழுவை பாராட்டலாம்.
மீனாட்சிசுந்தரம்
**

