

விஜய், விக்ரம், சூர்யா …
ஆஷிப் அனுபவங்கள்
இளையதளபதி விஜய் நடித்த, வெற்றி படமான துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில், முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். லேட்டஸ்ட்டாக வெளியாகி இருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் நல்ல ரோலில் நடித்துள்ளார்
நீங்க யார்? தமிழ் சினிமா அனுபவம் எப்படி என்று அவரிடம் கேட்டோம்
நான் மும்பையை சேர்ந்தவன். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தேன். அந்த படம் வெற்றி அடைய நிறைய வாய்ப்புகள் வந்தது. அடுத்து வித்தைக்காரன் படத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக வந்தேன். இப்போது ரெட்ரோவில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். அடுத்து விரைவில் வெளியாகவுள்ள சீயான் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
தமிழில் முன்னணி நட்சத்திரங்களான தளபதி விஜய், சீயான் விக்ரம், சூர்யாவுடன் நடித்தது மகிழ்ச்சி.
துப்பாக்கி என் முதல் படம் என்பதால், எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால் விஜய் மிக ஆதரவாக இருந்தார். பொறுமையாக சொல்லித்தந்து என்னை நல்லபடியாக பார்த்துக்கொண்டார். அவருடன் ஆக்சன் காட்சிகளில் இணைந்து நடித்தேன், அவர் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் கலக்கினார் அனைத்து நடிகர்களிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார். அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. சீயான் விக்ரம் ஒரு பிறவி நடிகர், எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். சீயானின் துருவ நட்சத்திரம் படத்தில் என் கதாப்பாத்திரத்தை கண்டிப்பாக எல்லோரும் பாராட்டுவார்கள், மிக முக்கியமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். சூர்யாவுடன் 18 நாட்கள் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்தேன், சில காரணங்களால் படத்தில் சில காட்சிகள் வரவில்லை. ஆனால் சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் மிகக் கடுமையான உழைப்பாளி. இப்போது என்னை பொறுத்தவரையில் தமிழ்நாடு என் சொந்த மாநிலம் மாதிரி ஆகிவிட்டது. இங்கு இருக்கும்போது தான் நான் மிக சுதந்திரமாக உணர்கிறேன். இப்போது நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் எனக்கென ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டரிலும் நடிக்க ரெடி. அடுத்து முன்னணி இயக்குனர், முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் . தமிழில் தனியிடம் பிடிக்க வேண்டும்’ என்பதே என் ஆசை. விரைவில் சில படங்களின் அறிவிப்புகள் வெளியாக உள்ளது’’ என்கிறார்
ஆஷிஃப்
மீனாட்சிசுந்தரம்

