விமர்சனம்/ லெவன்
நவீன்சந்திரா, ரியா, அபிராமி, ஆடுகளம் நரேன், தீலிபன் ஆகியோர் நடிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள படம் லெவன். போலீஸ் அதிகாரியான நவீன் சந்திரா வரிசையாக எரித்துக்கொல்லப்படும் கொலை வழக்கை துப்பறிகிறார். அப்போது அவருக்கு ஒரு புதுமையான தகவல் கிடைக்கிறது. அதாவது ஒரே பள்ளியில் படித்த இரட்டையர்களின் ஒருவர் கொல்லப்படுகிறார். அவரை கொன்றவர் இரட்டையர்களின் இன்னொருவர். இது ஏன் நடக்கிறது. அந்த கொலைகள் நின்றதா? கொலைக்கான பின்னணி என்ன என்பது லெவன் படக்கதை
எரிந்த நிலையில் சடலம் கைப்பற்றப்பட அந்த கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரி விபத்தில் சிக்க, அந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரியான நவீன் சந்திரா. அவர் விசாரணையில் இரட்டையர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.இப்படி ஏன் நடக்கிறது என்று மேலும் விசாரிக்க, கதை சூடுபிடிக்கிறது. கொலைக்கான காரணம், கொலை செய்யப்படும் பாணி, கொலையாளி யார் என்ற கிளைமாக்ஸ ஆகியவை படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
தமிழ்சினிமாவில் பல துப்பறியும் கதை வந்திருந்தாலும், பல இரட்டையர்கள் கதை வந்து இருந்தாலும் அதிலிருந்து வேறுபடுகிறது லெவன். இறுக்கமான முகம், அதிரடியான காட்சிகளில் அளவாக நடித்து மனதில் நிற்கிறார் ஹீரோ நவீன்சந்திரா. குறிப்பாக, கடைசி அரை மணி நேரம் அவர் நடிப்பு வேறு லெவல். படத்தில் இதயம் மாதிரி இடம் பெறுகிறது அந்த இரட்டையர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி காட்சிகள். அந்த சொல்லப்படும் விஷயங்கள் உருக்கம். பள்ளி நிர்வாகி வரும் அபிராமி காட்சிகள் நன்றாக இருக்கிறது. கொலையாளி அவரா? இவரா? என்ற சஸ்பென்ஸ்தான் இந்த மாதிரி படங்களுக்கு பிளஸ். அதில் இயக்குனர் சிறப்பாக திரைக்கதை கொடுத்து இருக்கிறார். கொலையாளி இவரா? என்ற அதிர்ச்சி கிளைமாக்சில் பார்வையாளர்கள் பலருக்கு வருவது நிச்சயம். ஹீரோவுடன் துப்பறியும் போலீசான தீலிபன் நடிப்பு ஓகே. ஹீரோயினாக வரும் ரியா படத்துக்கு, அந்த கேரக்டருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை. அட, இமான் இசையா என்று கேட்டும் அளவுக்கு அவரும் திரில்லர் படத்துக்கான இசை கொடுத்துள்ளார். கார்த்திக் அசோக் கேமரா படத்துக்கு பெரிய பலம். அவ்வப்போது சில காட்சிகள் மெதுவாக சென்றாலும் அடுத்தடுத்த கொலை, திருப்பங்கள், கிளைமாக்ஸ் காரணமாாக லெவன் மனதில் நிற்கிறது. மாறுபட்ட, பரபர திரில்லர் படத்தை விரும்புகிறவர்களுக்கு ராட்சசன் மாதிரி, அதிரடி படமாக லெவன் இருக்கும்.
மீனாட்சிசுந்தரம்



