வேம்பு/விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் குறைவு. அதிலும் கிராமப்புற பெண்களின் திறமையை சொல்லும் படங்கள் வெகு குறைவு. அதை போக்க வந்துள்ள படம் வேம்பு. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஷீலா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிராமம் ஒன்றில் பள்ளி படிப்புடன், சிலம்பாட்டத்தையும் கற்கிறார் ஷீலா. அந்த ஏரியாவில் சின்ன டவுனில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும், அவர் மாமன் மகனான மெட்ராஸ் ஹரி கிருஷ்ணன் அவரை காதலிக்கிறார். பொம்பள பிள்ளைக்கு கம்பு சுத்துற வேலை ஏன் என்று ஊரே ஷீலா அப்பாவை விமர்சனம் செய்கிறது. ஆனாலும், அவர் மகள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா திருமணம் நடக்கிறது. ஆனால், சில நாட்களில் ஒரு விபத்தில் ஹரி கிருஷ்ணன் பார்வை பறி போக, ஷீலா என்ன செய்கிறார். குடும்ப வாழ்க்கையில், சிலம்பாட்டத்தில் எப்படி ஜெயிக்கிறார். சிலம்பாட்டம் அவர் வாழ்க்கையில் எந்த அளவுக்கு உதவி, உயர்த்தியது என்பது வேம்பு படக்கதை
வேம்பு என்ற கேரக்டரில் வரும் ஷீலாவை சுற்றியே பெரும்பாலான கதை நடக்கிறது. பாசக்கார மகளாக, பொறுப்புள்ள குடும்ப தலைவியாக, வீரமுள்ள சிலம்பாட்ட வீராங்கனையாக, கிராமப்புற பெண்களுக்கு தன்னம்பிக்கை தருபவராக சிறப்பாக நடித்து இருக்கிறார். மிக எளிமையான உடை, இயல்பான பேச்சு, மாமா என்ற ஹரிகிருஷ்ணனை பாசமாக அழைப்பது என்று பல சீ்னகளில் ஸ்கோர் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் ஊரார் கேலி கிண்டலை புறக்கணித்து சிலம்பாட்ட வீராங்கனையாக மாறி, ஊருக்கு பெருமை சேர்க்கிற காட்சிகளில் அவர் நடிப்பு அழகு. கணவருக்கு பார்வை பறி போக, குடும்ப கஷ்டத்தை போக்க, அவர் போட்டோகிராபராக மாறுகிற சீன் கவிதை. அதேபோல் சிலம்பம் ஆடுவது, பண கஷ்டத்தில் தவிப்பது, போட்டியில் கலந்துகொள்வது போன்ற சீன்கள் நச். கிளைமாக்ஸ் காட்சி நெகிழ்ச்சி. மணிகண்டன் இசை, குமரன் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
அதேபோல், காதலராக, கணவராக வரும் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணனும் அழகான நடிப்பை தந்துள்ளார். கண் பார்வை பறி போனபின் அவர் தவிப்பது, மனைவிக்காக உதவவது ஆகியவை மனதில் நிற்கிறது. இவர்களை தவிர, போட்டோ கடை உதவியாளராக வரும் சிறுவன், ஷீலா அப்பா, ஹரி அம்மாவாக நடித்த கர்ணன் ஜானகி, செங்கல் சூளை அதிபர் என பலரும் சினிமாத்தனம் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள். சில சீன்களில் வந்தாலும் மாரிமுத்து நடிப்பும் சிறப்பு
கொஞ்சம் மெதுவான திரைக்கதை, கமர்ஷியல் விஷயங்கள் குறைவு என்றாலும், பெண் குழந்தைகளை வீரமாக வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருந்தால் அதை தடுக்ககூடாது. குறிப்பாக, நம் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்ற கருவில் உருவான வேம்புக்கு ஸ்வீட் கொடுத்த வரவேற்கலாம். கிராமப்புற பெண்கள் முன்னேற்றம், அவர்களின் கல்வி, வீர விளையாட்டின் முக்கியத்துவம் , தன்னம்பிக்கையை பேசும் இந்த கதையை உருவாக்கிய படக்குழுவை மனதார பாராட்டலாம்.
மீனாட்சிசுந்தரம்
**

