ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.
’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 29 மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் மே 30 மாலை 3 மணி வரை நடைபெறுகிது. மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.
’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த சாதனை முயற்சி குறித்து இயக்குநர் பிக்கய் அருண் பேசுகையில், “7 வருடங்களாக மீடியாவில் பணியாற்றியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமைக் கொள்கிறேன். இரண்டு தொலைக்காட்சிகளில் நேர்காணல் செய்யும் பணியை செய்து வந்தேன். அந்த விசயங்கள் இப்போது என் முன்பு நிற்கும் போது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. எனவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதை நிச்சயம் செய்து முடிப்போம்.
இதற்காக நான் ஒரு வருடமாக உழைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் முதலீடு செய்துள்ளார். இப்படி ஒரு படத்தை தயாரிக்கும் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கமலகுமாரி ஆகியோருக்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு புரொஜக்ட்டை பற்றி அவரிடம் நான் சொன்ன போது, என்னிடம் கதையை பொறுமையாக கேட்டார். அப்போது அவர் வேறு ஒரு படம் தொடங்கி விட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. பிறகு இந்த படம் குறித்து அவரிடம் சொன்ன போது, ஒரு நாள் டைம் கேட்டார். அதன் பிறகு பட்ஜெட் கேட்டார், அவர் ஒரு பட்ஜெட் சொன்னார், அதில் பண்ண முடியும் என்று சொன்ன, உடனே எனக்கு ஊக்கம் கொடுத்து பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் இல்லை என்றால், இந்த படம் இல்லை.
இந்த படத்திற்காக நான் நிறைய ஆய்வு செய்திருக்கேன். 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடிப்பது என்பது சாத்தியமே இல்லை. அப்படி என்றால் நான் எப்படி செய்வேன்? என்ற கேள்வி தோன்றும். அதற்கு தான் ஆய்வு மேற்கொண்டேன். பல துறைகளில் பணியாற்றினேன், பல வேலைகளை எப்படி குறுகிய காலக்கட்டத்தில் செய்யலாம், என்று ஆய்வு செய்தேன்.
பாடலாசிரியாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். பாடல்கள் பாடியிருக்கேன், ராப் பாடகாரானேன். பிறகு ஐடி துறையில் பணியாற்றினே. பிறகு படிக்க தொடங்கினேன். ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கத்துக்கிட்டேன். ஒளிப்பதிவாளரிடம் இருந்து எப்படி வேலை வாங்கலாம், லைட்டிங் உள்ளிட்ட பல விசயங்களை அவர்களுடன் என்னால் ஆலோசிக்க முடியும். 3 கேமராக்களை வைத்து எடுக்க இருக்கிறோம். லைட்டிங், எப்படிப்பட்ட கேமரா என்று அனைத்திலும் சரியான தெளிவோடு இருக்கிறோம். இதை கின்னஸ் ரெக்கார்ட்ஸிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் இப்படி ஒரு கேட்டகிரி இல்லை, என்று சொன்னார்கள். அதனால் தான், நோபல் விருதுக்கு எடுத்து சென்றோம். அவர்கள் இதை கேட்டதும், இது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருக்கிறது, இதை செய்யலாம் என்று சொன்னார்கள்.
அதே சமயம், இது சாத்தியமா, இதை எப்படி செய்யலாம் என்று கேட்டார்கள். அதேபோல் அவர்கள் இந்த துறை சார்ந்தவர்களிடம் இது குறித்து கேட்டு இது சாத்தியம், நீங்க சொன்னது உண்மை, ஆனால் இதை செய்ய முடியுமா தெரியவில்லை. நீங்கள் முடித்தால் உங்களுக்கு சான்றிதழ், வழங்குகிறோம், என்று சொல்லியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடத்தப்படும் அதே நாளில் எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கே வரவைத்து அனைத்து பணிகளையும் அங்கேயே செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், சாத்தியம் முடியும் ’’ என்றார்
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சீகர் ராஜ்குமார் பேசுகையில், “தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் படங்கள் மூலம் உங்களை சந்தித்திருக்கிறேன். அருண் இந்த கதையை சொன்ன போது, நானும் என் மனைவியும் ஆலோசனை செய்துவிட்டு அவரிடம் பேசினேன். அப்போது எதை எப்படி செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, அவர் சில விசயங்களை மிக தெளிவாக கூறினார். மேலும், சிலரை சந்திக்க வைத்தார், அவர்களிடம் பேசும் போது சிலர் பயந்து விட்டார்கள். ஆனால், இளைஞர்களுடன் இணைந்த போது அவர்கள் செய்யலாம் என்று எங்களுடன் தைரியமாக இணைந்தார்கள். அதேபோல் நடிகர்களும் செய்யலாம் என்று எங்களுடன் இணைந்துள்ளனர். தூங்காமல் வேலை செய்யப் போகிறோம். இதை எப்படி செய்யப் போகிறோம், என்று எங்களுக்கும் இதுவரை தெரியவில்லை. கடவுளிடம் தான் இருக்கிறது. ஆனால், எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குழுவினரும் உற்சாகமாக இருக்கிறார்கள். ” என்றார்.
மீனாட்சிசுந்தரம்
**

