
குட் டே/ விமர்சனம் 3.5/5
**
திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கும் கதைநாயகன் பிரித்விராஜ் ராமலிங்கத்துக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, பணத்தட்டுப்பாடு காரணமாக குடும்பத்தில் அதை விட பல பிரச்னைகள், வேலை நிமித்தம் குடியிருக்கும் இடத்திலும் வீட்டு ஓனருடன் பிரச்னை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தால் சராசரி தமிழன் செல்லும் இடம் டாஸ்மாக்தானே.
ஏற்கனவே போதையில் இருப்பவர், இன்னும் கொஞ்சம் சரக்கு போட, அவர் செய்யும் அலம்பல்கள், வம்புகள், கிண்டல் பேச்சுகள்தான் குட் டே படம். ஒரே நாளில் இந்த கதை நடக்கிறது. 96, மெய்யழகன் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய பிரித்விராஜ் ராமலிங்கம் கதைநாயகனாக நடித்து இருக்கிறார். அவரே தயாரிப்பாளர். புதுமுகம் என்.அரவிந்தன் இயக்கியிருக்கிறார். பூர்ணா திரைக்கதை எழுதியிருக்கிறார்.
கவிஞர் கார்த்திக் நேத்தாவின் முந்தைய குடிகார வாழ்க்கையில் இருந்து பல சீன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர் பாடல் எழுதி, கூடுதல் வசனங்களையும் எழுதியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார்
ஒரு குடிகாரனின் ஒரு நாள் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பது கதையாக இருந்தாலும், அதை சீரியசாக, சோகமாக சொல்லாமல் ஜாலியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். நாம் நேரில் பார்த்து ரசித்த பல குடிகாரர்களை, அவர்களை சேட்டைகளை நினைவு படுத்துகிறார் ஹீரோ பிரித்விராஜ் ராமலிங்கம்.அவரின் பேச்சும், அவரின் செயல்பாடுகள்,, பாடிலாங்குவேஜ் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. மனிதர் பல சீன்களில் பின்னி எடுத்து இருக்கிறார்.
வீட்டு ஓனரிடம், முன்னாள் காதலியிடம், போலீசிடம், நண்பனிடம், முகம் தெரியாத சிலரிடம் போதையில் அவர் அடிக்கும் லுாட்டிகள்தான் படத்தின் பலம். அவ்வளவு விறுவிறுப்பாக, ரசிக்கும்படியாக இருக்கிறது. அதேசமயம், இதை வழக்கமான சரக்கு படமாக இல்லாமல், கிளைமாக்சில் ஒரு சம்பவத்தை காண்பித்து வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அந்த கிளைமாக்ஸ் போர்ஷன், சீன்கள் பல குடிகாரர்களுக்கு பாடமாக, விழிப்புணர்வாக இருக்கும். அதையும் உருக்கமாக சொல்லியிருப்பது புத்திசாலி தனம்
ஹீரோ தவிர, அவர் முன்னாள் காதலியாக வரும் மைனா, நண்பனாக வரும் பக்ஸ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆர்ட் டைரக்டர் விஜய்முருகன், முக்கியமான கேரக்டரில் வரும் போஸ் வெங்கட்,
வேல.ராமமூர்த்தியும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இன்னொரு போலீசாக வரும் திருநங்கை ஜீவாவுக்கும் நல்லதொரு அழுத்தமான வேடம். காளி வெங்கட் சில சீன்களில் வந்தாலும் அமர்களம் செய்கிறார். இப்படி அந்தந்த கேரக்டரில் தகுந்த நடிகர்களை வைத்தது படத்தின் பலம். இரவு நேரத்தில் பெரும்பாலான சீன்கள் நடக்கின்றன. அதை ரம்மியாக காண்பித்து இருக்கிறது மதன்குணதேவ்.இவரின் படத்தின் எடிட்டிங்கையும் கச்சிதமாக கொடுத்து இருக்கிறார். . கோவிந்த்வசந்தா இசை, கிளைமாக்சில் வருகிற அந்த குழந்தையின் பாடல் படத்துக்கு பலம்.
படம் முழுக்க, இரவில் பல்வேறு இடங்களுக்கு ஹீரோ சென்று குடிக்கிற சீன்கள் அல்லது குடித்துவிட்டு ரவுசு செய்யும் சீன்கள் அதிகம். அதை ரசிக்கும்படி காமெடி கலந்து கொடுத்து இருப்பது படத்தை இன்னும் அழகாக்குகிறது. ஒரு சீனில் கவிஞர் கார்த்திக் நேத்தாவும் வருகிறார். அந்த சீனுக்கு விசில் பறப்பது உறுதி. காதலி வீடு, போலீஸ் ஸ்டேஷன், சுடுகாடு, கிளைமாக்ஸ் காட்சிகளில் விறுவிறுப்பு. படம் முழுக்க நகைச்சுவை, சட்டையர் இழையோடுகிறது.கூடவே கோவிந்த் வசந்தா இசையும் பாடலும் பலமாக இருக்கிறது. இப்படி போதையில் தள்ளாடியபடி செல்லும் கதை, கிளைமாக்சில் ஒரு விஷயத்தை தொடுகிறது. அதற்குபின் வரும் சீன்கள் சீரியஸ் ஆனவை. அதை நேர்த்தியாக படமாக்கி, நல்ல பாசிட்டிவ் கருத்துடன் படத்தை முடிக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி நேர, முழு நேர, சோஷியல் குடிகாரர்கள் பார்த்து ரசித்து, திருந்த வேண்டிய விஷயம் அது.
வழக்கமான ஹீரோ, பில்டப், ஹீரோயின்,காதல், வில்லன், சினிமாத்தனம் இல்லாமல், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை சொல்லிவிட்டு, அவனை குடிக்க வைக்கும் காரணங்கள், குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை, அதை தவிர்ப்பதால் உண்டாகும் நன்மைகளை சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார்கள். குடிக்கிறவர்கள், குடிக்க நினைப்பவர்கள், குடித்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் குட் டேவை
பார்த்து ரசித்தால் அவர்கள் வாழ்க்கையும் குட் டே ஆக மாற வாய்ப்பு இருக்கிறது.
மீனாட்சிசுந்தரம் .


