
ரவுண்ட் டேபிள் இந்தியா (Round Table India) என்பது ஒரு சர்வதேச நட்பு அமைப்பு, இது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் ஆனது. இந்த அமைப்பு சேவைகள், நட்பு மற்றும் நல்லெண்ணத்தை தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, 1927 இல் இங்கிலாந்தின் நார்விச்சில் லூயிஸ் மார்செசி என்பவரால் நிறுவப்பட்டது. கல்வி மற்றும் பிற சமூக சேவைகள் மூலம் பின்தங்கிய குழந்தைகளுக்கான ஆதரவை வழங்குதல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவுதல் ஆகியவை இதன் முக்கிய செயல்பாடுகள் குறிப்பாக, இந்தியாவில் பள்ளிகள் கட்டுவது மற்றும் பிற சமூக சேவை திட்டங்களில் ஈடுபடுகிறது. அரசியல் சார்பற்ற மற்றும் மத சார்பற்ற இளைஞர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு, இயக்கி வருகிறது.
சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் ஒரு அங்கமான ரவுண்ட் டேபிள் 100 அதன் தலைவர் திரு. பிரவேஷ் ஜெயின், பகுதி தலைவர் திரு.கிரண் உள்ளிட்டோர் தலைமையில், கல்வி வளர்ச்சி மற்றும் தேசத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்திய, நன்கொடையாளர்களுக்கு மிகப்பிரமாண்ட பாராட்டு விழாவை சமீபத்தில் நடத்தியது. .
இந்நிகழ்ச்சியில் மறைந்த திரு.ரத்தன் டாடா அவர்களுக்கு “சூப்பர் ஹீரோ 2.0 க்கு அஞ்சலி” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மேலும், ரவுண்ட் டேபிள் 100- ஆல் பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளில் தேசிய அளவிலான முன்முயற்சியின் கீழ் விநியோகிக்கப்பட்ட 10,000 நாற்காலிகளை, அதாவது ரவுண்ட் டேபிள் இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை மைல் கல்லை நினைவு கூர்ந்தது. இந்நிகழ்ச்சியில், நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சேவையின் தாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிக்கு அவர்கள் செய்த விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ரவுண்ட் டேபிள் 100- இன் தலைவர் திரு. பிரவேஷ் ஜெயின் கூறுகையில், ‘‘இந்த மைல்கல் எண்களைப் பற்றியது மட்டுமல்ல-இது வாழ்க்கையை மாற்றுவது பற்றியது என்று குறிப்பிட்டார். மேலும் ரவுண்ட் டேபிள்- 100, 50 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுதல் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய உட்கட்டமைப்புகளைநன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை பெருமையுடன் செயல்படுத்தியுள்ளது என்றார். மிகவும் இதயப்பூர்வமான முன்முயற்சிகளில் ஒன்றான ஃப்ளைட் ஆஃப் பேண்டஸி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்களின் முதல் விமான சவாரி கனவை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது என்றும் தெரிவித்தார். இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள் மற்றும் எதிர்காலத்திற்கான கனவுகளுக்கு எரிபொருள்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரவுண்ட் டேபிள் 100 இன் பகுதி தலைவர் திரு. கரண் கூறுகையில், ‘‘கல்வியின் மூலம் சுதந்திரம் என்ற எங்கள் முதன்மை முன்முயற்சியின் மூலம், ரவுண்ட் டேபிள் இந்தியா இதுவரை 10,040 வகுப்பறைகளை உருவாக்கியுள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும், 3,960 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 3.78 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை மேம்படுத்தி உள்ளதாகவும், கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தியது மற்றும் 11 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியாகவும்’’ தெரிவித்தார். இத்திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு ரூ.537 கோடி என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வு மறைந்த திரு ரத்தன் டாடாவின் பெருமைகள், பணிவு, சேவை மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றிற்கு இதயப்பூர்வமான அஞ்சலியாக இருந்தது. மேலும் கல்வி மற்றும் அதிகாரமளித்தல் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. இந்த அமைப்பின் சேவை தொடர்கிறது.
மீனாட்சிசுந்தரம்
**

