***
லோகா பட விமர்சனம்
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், நடிகர் துல்கர்சல்மான் தயாரிப்பில்,
மலையாளத்தில் வந்திருக்கும் படம் ‘லோகா:சாப்டர்1 சந்திரா.’. தமிழிலும் லோகா என்ற பெயரில் டப்பாகி உள்ளது.
ஸ்வீடனில் இருந்து பெங்களூர் வந்து ஒரு அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். எதிர்வீட்டில் நண்பர்களுடன் வசிக்கும் ‘பிரேமலு’ நஸ்லன் அவரை காதலிக்க ஆசைப்படுகிறார். ஆனால், கல்யாணி நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்கள் ஆகிறார். அப்போது உடல் உறுப்புகளை திருடும் ஒரு கும்பல், ஒரு பகை காரணமாக, கல்யாணியை ஆட்டோவில் கடத்துகிறது. அவரை மீட்க ஓடுகிறார் ஹீரோ நஸ்லன். ஆனால், கல்யாணியோ அந்த கும்பலை அடித்து, உதைத்து கோரப்பல்லுடன்
அவர்களின் ரத்தத்தை குடிக்கிறார். அப்போது கல்யாணி சில நுாறு ஆண்டுகளாக வாழ்வதும், அவர் ரத்தத்தை குடிக்கும் இரத்தகாட்டேரி என்பதும் நஸ்லனுக்கு தெரியவருகிறது. அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சாண்டி கல்யாணிக்கு டார்ச்சர் கொடுக்க, கல்யாணியால் அடி வாங்கிய ரவுடி கும்பல் அவரை துரத்த, அடுத்து என்ன நடக்கிறது. கல்யாணி அப்படி மாறியது ஏன்? வில்லன்களிடம் இருந்து தப்பித்தாரா என்பது லோகா கதை. இது முதல்பாகம்தான், மொத்தம் 5 பாகங்களாக வர இருக்கிறது.
சூப்பர் நேச்சுரல் பவர், நீலி கதை, ரத்தம் குடிக்கும் காட்டேரி என பல விஷயங்களை கலந்து ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் டொம்னிக் அருண். அதை காதல், காமெடி, ஆக் ஷன், எமோசன் கலந்து கமர்ஷியல் கதையாக கொடுத்து இருக்கிறார். ஹீரோ, மாநாடு படங்களில் நாம் பார்த்த கல்யாணியா இது என்று ஆச்சரியப்படும்வகையில் ,உருவத்திலும், நடிப்பிலும் ஏகப்பட்ட மாற்றங்களுடன் கலக்கியிருக்கிறார். படத்தில் அதிகம் பேசாமல்,உடல்மொழியால் பேசியிருக்கிறார்.சற்றே அமைதியான பெண்ணாக வருபவர் நீலியாக மாறி,ரத்தம் குடிக்கும்போது பயமுறுத்துகிறார். குறிப்பாக,கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆக்சன் ஹீரோகளுக்கு நிகராக சண்டை போடுகிறார்.அவரின் காஸ்ட்யூம், மேக்கப் கூட நே ர்த்தியாக இருக்கிறது. வெல்டன் கல்யாணி.
பிரமேலு நஸ்லன் அப்பாவிதனமான நடிப்பில் மனதில் நிற்கிறார். அவரின் பார்ட்டி சம்பந்தப்பட்ட சீன், கல்யாணியை பார்த்து மிரளும் சீன், கடைசியில் காதலுக்காக துணிந்து நிற்கும் சீன் நன்றாக இருக்கிறது.அவரின் நண்பர்களாக வருபவர்களும் படத்துக்கு துணையாக நிற்கிறார்கள். கல்யாணி ஏன் அப்படி மாறினார் என்ற அந்த பிளாஷ்பேக் சீன்,மலைவாழ் மக்கள் காட்சிகள் படத்துக்கு முதுகெலும்பு. அதிலும் அந்த சிறுமியின் கோபம்,ஆக் ஷன் சீன்கள் மெய்சிலர்க்க வை க்கின்றன. வில்லத்தமான வேடத்தில் டான்ஸ்மாஸ்டர் சாண்டியும் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவர் ‘வேறு’ மாதிரி மாறி நடிப்பதும் சூப்பர்
இவர்களை தவிர,கவுரவ வேடத்தில் கொஞ்ச சீன்களில் வந்தாலும் அவ்வளவு எனர்ஜியாக நடித்து இருக்கிறார் டொவினோதாமஸ். தயாரிப்பாளரான துல்கரும் கிளைமாக்சில் வந்து சர்ப்பிரைஸ் கொடுக்கிறார். மஞ்சும்மல்பாய்ஸ் சவுபின்ஷாகீரும் இருக்கிறார். அடுத்த பாகத்தில் மம்முட்டி இருக்கிறார் போல.மூப்பனாக அவர் தடயம் தெரிகிறது. ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நஸ்லன்,டொவினோ, துல்கர், சவுபின் போன்றவர்கள் ஈகோ பார்க்காமல் நடித்ததே பெ ரிய விஷயம். இரவு நேர பெங்களூரை, சண்டைகாட்சிகளை, காடு சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை அவ்வளவு அழகாக காண்பித்து இருக்கிறது நிமிஷ்ரவியின் கேமரா. ஜேகஸ்பிஜாயின் இசை,யானிபென்னின் ஆக்சன் படத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது. மலையாள வாடை இன்றி தமிழ் டப்பிங்கை கொடுத்து இருக்கிறார் ஆர்.பி.பாலா. கிராபிக்ஸ் பக்கா
இடைவேளைக்குபின் அந்த ஆஸ்பிட்டல் சீன், கிளைமாக்ஸ் முந்தைய காட்சிகள் தொய்வு. கல்யாணி பின்னணி குறித்த இன்னும் தெளிவாக விளக்கி இருக்கலாம். ஒரு தாத்தா,பேத்தி கதை ஏன் வருகிறது என புரியவில்லை.பெங்களுருக்கு கல்யாணி ஏன் வருகிறார். என்ன செ ய்கிறார். அவருக்கு உதவுபவர்கள் குறித்த விஷயங்களில் தெளிவு இல்லை.
ஆனாலும், பிரஷ் கதை, அடுத்தடுத்த திருப்பங்கள், புது கேரக்டர்களின் என்ட்ரி, ஆக் சன், காமெடி காட்சிகளால் படம் விறுவிறுப்பாக சொல்கிறது.வழக்கமான காதல், அரசியல்,பழிவாங்கல் இல்லாமல் புது பின்னணியில் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனர் திறமையை காண்பிக்கிறது. நீலி கதையை,இன்றைய காலத்துடன் தொடர்பு படுத்தி இருப்பதும், ஹீரோயின் பின்னணியில ஒரு அழுத்தமான கமர்ஷியல்கதையை சொல்லியிருப்பதும் லோகாவை ரசிக்க வைக்கின்றன.
மீனாட்சிசுந்தரம்.

