*****

விமர்சனம்/நிழற்குடை/ 3.5/5
சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜத், கண்மணி, வடிவுக்கரசி உட்பட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் நிழற்குடை. ஈழப்போரில் குடும்பத்தை இழந்து, சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சேவை செய்கிறார் தேவயானி. வேலைக்கு போகும் இளம் தம்பதிகளான விஜித், கண்மணி தங்கள் பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் தேவயானி. அந்த குழந்தையை பாசமாக வளர்க்கிறார். அப்போது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த தம்பதிகள் அமெரிக்காவுக்கு செல்ல தயாராகிறார்கள். தேவயானியை பிரிய மறுக்கிறது குழந்தை. ஒரு நாள் திடீரென குழந்தை கடத்தப்படுகிறது. அந்த குழந்தையை கடத்தியவர்கள் யார்? அந்த குழந்தை அமெரிக்கா சென்றதா? தேவயானி என்ன ஆனார்?என்பது படத்தின் கதை
நிழற்குடை படத்தின் கதை நாயகி தேவயானிதான். கதையை சுமப்பதும் அவர்தான். தனது அறிமுக காட்சியில் முதியோர்களின் வலி குறித்து நெல்லை ஜெயந்தா கவிதையுடன் பேச ஆரம்பிக்கிறார். அடுத்து, ஈழப்போரில் தனது குடும்பத்தை இழந்தது குறித்து பீல் பண்ணுகிறார். அந்த குழந்தையை சந்திப்பது, பின்னர் குழந்தை பாசத்தால் உருகுவது என சிறப்பான நடிப்பை தந்து இருக்கிறார். குறிப்பாக, குழந்தைக்கும் அவருக்குமான சீன்கள், குழந்தையை பாசமாக வளர்ப்பது, குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து தவிக்கிற சீன்கள் படத்துக்கு பெரிய பலம். சில சீன்களில் மட்டும் பழக்க தோஷத்தால் சீரியல் நடிப்பு தானாக வந்து விடுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம். மற்றபடி, அவர் நடிப்பு, இந்த படம் மூலம் சொல்லும் மெசேஜ், கூட்டுக்குடும்பம், குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் தலைமுறை மனநிலை குறித்து உணர்வுபூர்வமாக அவர் சொல்லும் விஷயங்கள் சிறப்பு.
இளம் தம்பதிகளாக வரும் விஜித், கண்மணி அழகாக தெரிகிறார்கள். க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள். குழந்தையாக வரும் அகானா, நிகாரிகா கொள்ளை அழகு. தேவயானியுடன் பாசமாக இருப்பது, அவரை பிரியமுடியாமல் தவிப்பது போன்ற சீன்களில் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்கள்.
மாறுபட்ட ஸ்டைலான நடிப்பை தந்துஇருக்கிறார் பாஸ் ஆக வரும் இயக்குனர் ராஜ்கபூர். சிறப்பு தோற்றத்தில் வரும் வடிவுக்கரசி சீன்கள் டச்சிங். வில்லன் போல வந்து கடைசியில் நான் நடிகர் என்று சொல்லும் தர்ஷனும், போலீசாக வரும் இளவரசும் மனதில் நிற்கிறார்கள்
ஆர்.பி.குருதேவ் கேமரா, ந ரேன் பாலகுமார் இசை படத்துக்கு பலம். வழக்கமான ஆக் ஷன், மசாலா படங்களுக்கு மத்தியில் உறவுகளின் வலிமை, குழந்தை வளர்ப்பு, பணத்துக்கு பின்னால் ஓடும் இளம் தலைமுறை, குழந்தைகளின் மனநிலை, கூட்டுக்குடும்பத்தின் மகிமை, காதல் திருமணங்களின் பிரச்னை, நகர வாழ்க்கையின் இன்னொரு முகம், பாசத்துக்காக ஏங்கும் பெண்கள் என பல விஷயங்களை அழுத்தமாக சொல்லி, மனதில் நிற்கிறது நிழற்குடை
மீனாட்சிசுந்தரம்

