ஆகக்கடவன/விமர்சனம்

சென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் 3 நண்பர்கள், ஒரு கட்டத்தில் அதை சொந்தமாக வாங்க முயற்சிக்கிறார்கள், அதற்காக கடன் வாங்குகிறார்கள். அந்த பணம் திருடு போக, தனது சொந்த ஊருக்கு சென்று, நிலத்தை விற்று பணத்தை புரட்ட முயற்சிக்கிறார் நண்பர்களின் ஒருவரான ஆதிரன் சுரேஷ். அவருடன் இன்னொரு நண்பரான சி.ஆர்.ராகுல் டூவீலரில் பயணிக்கிறார். மேல் மருத்துவத்துார் தாண்டியவுடன் அவர்கள் சென்ற டூ வீலர் பஞ்சர் ஆக, அருகே ஒரு தோப்பில் இருக்கும் பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கே சிலர் இருக்கிறார்கள். சில விஷயங்கள் நடக்கிறது. இவர்களை தேடி இன்னொரு நண்பன் அங்கே வருகிறான். சூழ்நிலை மாறுகிறது. அது என்ன என்பதை, யாரும் எதிர்பாராத மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தர்மா. சாரா கலைக்கூடம் தயாரித்துள்ளது.
பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த படம். இன்னும் சொல்லப்போனால் ஹீரோயின் மட்டுமல்ல, பெண் கேரக்டரே இல்லாத படம். பஞ்சர் ஒட்ட செல்லும் நண்பர்கள் சந்திக்கும் ஆபத்து என்ன என்ற சின்ன கருதான். அதை பல திருப்பங்களுடன், விறுவிறு திரைக்கதையாக சொல்லியிருப்பது புது முயற்சி. 3 நண்பர்களின் சென்னை வாழ்க்கை, போராட்டங்களில், கனவு, சிக்கலில் இருந்து கதை தொடங்குகிறது. சினிமாத்தனம் இல்லாத நடிப்பு, மிக யதார்த்தமான உரையாடல் ஆகியவை படத்தை தனித்தன்மையாக காண்பிக்கிறது. டூவீலர் பஞ்சர் ஆக, பக்கத்தில் எழுதப்பட்டு இருக்கும் நம்பருக்கு போன் செய்கிறார்கள். மறுமுனையில் பேசுபவர் ஒரு மண் பாதையில் ஒரு தோப்புக்குள் வர சொல்கிறார். அங்கே என்ன நடக்கிறது. அங்கே இருப்பவர்கள் யார்? அங்கிருந்து நண்பர்கள் மீண்டார்களா என்ற கதை, சீனுக்கு சீன் ரசித்து இயக்கி இருக்கிறார் தர்மா.நமக்கும் அடுத்த என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது
இதில் நண்பர்களாக நடித்த 3பேர், பஞ்சர் கடையில் இருக்கும் 2பேர், பக்கத்தில் செட்டில் இருக்கும் 2 பேர் என குறைவான கேரக்டர் நடித்து இருந்தாலும், அனைவரும் தங்கள் தனித்தன்மையான நடிப்பை தந்து இருக்கிறார்கள். யாருமே சினிமாத்தனம் இல்லாமல், ஓவர் பில்டப் இல்லாமல் நடித்து இருப்பதும், அவர்களின் கேரக்டர் பின்னணியும் சிறப்பு. ஒவ்வொரு கேரக்டரும் இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறுவது, அந்த தோப்பில் நடக்கும் விஷயங்கள் செம. மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் லியோ வி ராஜா.
படத்தில் அதிக டயலாக், கொஞ்சம் சலிப்பு என சில குறைகள் இருந்தாலும், திரைக்கதையும், ஒவ்வொரு கேரக்டரும், அதன் மூவ்மென்ட்டும், கிளைமாக்சில் பல புதிர்களுக்கான விடை சொல்லப்படுவதும் ரசிக்க வைக்கிறது. மலையாள சினிமாக்களை கொண்டாடுபவர்கள், மாறுபட்ட கதைக்களத்தில் தமிழ்சினிமா இல்லையே என்று குறை சொல்பவர்கள் ஆகக்கடவன பார்த்தால் படக்குழுவை ஆரத்தழுவி பாராட்டுவார்கள். படத்தின் தலைப்பு மட்டுமல்ல, படமும் வித்தியாமானது. புது முயற்சி எடுத்துள்ள படக்குழுவுக்கு வாழ்த்துகள்
மீனாட்சிசுந்தரம்

