வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு வரிசையில் காமெடியனான ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்து இருக்கும் படம் அம்பி. டி2 மீடியா சார்பில் எப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ளார். ரோபோ ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். இவர்களை தவிர ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி உட்பட பலர் நடிக்க, வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J எல்வின்.
படம் குறித்து இயக்குனர் பேசுகையில் ‘இது முழுக்க முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம்.
இந்த கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக ,அப்பாவியாக , பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அன்னியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது ’’ என்றார்
ரோபோ சங்கர் பேசுகையில் ‘‘இந்த நேரத்தில் நான் நடிகர் தனுசை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டேன். அவருக்கு போன் செய்து உதவி கேட்டேன். உடனே நான் எதிர்பாராத பெரிய உதவியை செய்தார். அதேபோல், 2 ஆண்டுகளாக மஞ்சள் காமாலையில் கஷ்டப்பட்டேன். நான் அவ்வளவுதான் என்றார்கள். அப்போது என் மனைவி, என் குடும்பத்தினர் அக்கறையுடன் பார்த்தார்கள். இப்போதும் மருந்து சாப்பிடுகிறேன். இளம் வயதில் தாத்தா ஆகிவிட்டேன். இன்றைக்கு என் பேரனுடன் நேரம் செலவிடுகிறேன். அதெல்லாம் என் வாழ்க்கையில் பொன்னான நேரம். 33 ஆண்டுகளாக மைக் பிடித்து பேசி இருக்கிறேன். 18 ஆயிரம் மேடைகளை பார்த்து இருக்கிறேன். தினமும் 9 ஷோ கூட நடித்து இருக்கிறேன். 100, 150 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கும். ஆனாலும், ரசித்து செய்தேன்.அப்புறம் கலக்கப்போவது யாரு மூலமாக பிரபலம் ஆனேன். இப்ப, அம்பி மூலமாக அடுத்த கட்டம் சென்று இருக்கிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும்’ என்றார்
மீனாட்சி சுந்தரம்
**
**

