மையல்/விமர்சனம்

ஆடு திருட செல்லும் ஹீரோ ‘மைனா’ சேதுவை ஊர் மக்கள் துரத்த, ஒரு கிணற்றில் குதித்து தப்பிக்கிறார். அவருக்கு கால் முறிவு ஏற்பட, மந்திரவாதி கிழவி ரத்னமாலா பேத்தியான ஹீரோயின் சம்ரிதிதாரா அவரை காப்பாற்றி, தனது வீட்டில் அடைகலம் கொடுக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. அதேசமயம், சொத்துக்காக ஒருவரை அந்த ஏரியா பெரிசு தேனப்பன் கொலை செய்ய, அந்த பழி ஹீரோ மீது விழுகிறது. ஹீரோவை போலீஸ் துரத்த, அவரோ திருந்தி திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். அவர் காதல் கை கூடியதா? ஹீரோவுக்கு என்னாச்சு என்பது மையல் கதை
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை,வசனத்தில் மைனா உட்பட பல படங்களில் பணியாற்றிய ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் இந்த படம் வந்துள்ளது. நீண்ட காலத்துக்குபின் முழு கிராமத்து பின்னணியில் கதை நகர்கிறது.சற்றே நடுத்தர வயது தோற்றத்தில் நன்றாக நடித்துள்ளார் மைனா சேது. காதல் காட்சிகளில், போலீஸ் பிடியில் அகப்பட்டு சித்ரவதை அனுபவிக்கும் காட்சிகளில், கடைசியில் பொங்கி எழுகிற காட்சிகளில் அவர் நடிப்பு ஓகே. ஹீரோயினாக வரும் மலையாள நடிகையான சம்ரிதிதாரா படத்துக்கு பெரிய பிளஸ். அவரின் பாவாடை தாவணி காஸ்ட்யூம், அழகான குரல், நடிப்பு அவ்வளவு அழகு. அவர் பாட்டியாக வரும் ரத்னமாலா நடிப்பில் அவ்வளவு செயற்கை தனம்
போலீசாக வரும் சுப்பிரமணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சி.எம்.பாலா நடிப்பு ஓகே. வில்லனாக வரும் தேனப்பன, கடைசியில் வேறு மாதிரி மாறி ஸ்கோர் செய்கிறார். அந்த கால வில்லன் பாணியில் ஒரு கற்பழிப்பு காட்சியிலும் நடித்துள்ளார். கிராமத்து காட்சிகள், காதல் சம்பந்தப்பட்ட டயலாக் ஓகே. கிளைமாக்ஸ் மிகவும் உருக்கம். ஆனால், பெரும்பாலான காட்சிகளில் செயற்கை தனம் இருக்கிறது. சில காட்சிகள் நீளமாக இருப்பது போரடிக்கிறது. ஒட்டு மொத்த போலீசையும் கெட்டவர்களாக காண்பிக்கிறார்கள். டயலாக், திரைக்கதை ஓகே என்றாலும், இது ஜெயமோகன் எழுதியதா என சில சமயம் சந்தேகம் வருகிறது. இசையமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர்கீத் இதில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.அவர் இசை ரசிக்கலாம்.குமார் ஒளிப்பதிவு ஓகே ரகம்
திருட்டு, காதல், கொலை, போலீஸ் துரத்தல், விசாரணை என படம் நகர்ந்தாலும், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்து, காட்சிகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னொரு சேது மாதிரி மையல் வந்து இருக்கும்.
மீனாட்சிசுந்தரம்
***

