வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர்
ஹீரோக்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார்.
ஜெ.கதிர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
சென்னையில் நடந்த திருப்பூர் குருவி பட டிரைலர் வெளியீட்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சேகர் பேசுகையில், “சிறிய அளவில், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். 10 நாட்களில் ஒரு படம் முடிப்பது என்பது பெரிய விசயம். அதை இந்த குழுவினர் செய்திருக்கிறார்கள். இயக்குநரும் தனக்கு எது தேவை, என்ன சொல்லப் போகிறோம், என்பதில் மிக தெளிவாக இருந்து படத்தை முடித்திருக்கிறார். ரூ.15 லட்சத்தில் நான் படம் தயாரித்தேன். அந்த படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம். படம் முடிந்த பிறகு நடிகர், நடிகைகள் தனியாக சென்று விடுகிறார்கள், இயக்குநரும், தயாரிப்பாளரும் மட்டும் அந்த படத்தை வெளியிட்ட பிறகும் உழைக்கிறார்கள். அப்படி இல்லாமல், படம் வெளியான பிறகும், இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஒற்றுமையாக இருந்து படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆளுக்கு இரண்டு ஏரியாக்களை எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் மக்களிடம் உங்கள் படத்தை நேரடியாக கொண்டு சேருங்கள். நோட்டீஸ் கொடுங்கள், மாட்டு வண்டியில் பேனர் கட்டுங்கள். எதில் எல்லாம் குறைவான செலவு இருக்கிறதோ அதை எல்லாம் வித்தியாசமான முறையில் செய்து, இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ’என்றார்
படத்தின் இயக்குனர் ஜெயகாந்தன் ரெங்கசாமி பேசுகையில், ‘‘ நான் திருப்பூரில் பணியாற்றிய போது அங்கு நடக்கும் சில சம்பவங்களை கவனித்திருக்கிறேன். அவற்றை மக்களிடம் சொல்ல வேண்டும், என்று அப்போதே எனக்கு தோன்றியது. அதை இதில் சொல்லியிருக்கிறேன். ஆரம்பம் முதல் எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். அவர்களின் உதவியினால் தான் இந்த படம் ரிலீஸ் வரை வந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இது திருப்பூரில் நடந்த உண்மை சம்பவம் தான். இதுபோல் அங்கு ஏராளமான சம்பவங்கள் நடக்கிறது. ஆனால், அவற்றை சொல்ல வேண்டுமானால் கமர்ஷியலாக சொல்ல வேண்டும், பட்ஜெட் அதிகம் தேவைப்படும் என்பதால், ஒரு சிறிய விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு செய்திருக்கிறேன். மிகவும் கஷ்ட்ப்பட்டு தான் எடுத்திருக்கிறோம்.’ என்றார்
மீனாட்சிசுந்தரம்
**


