இது கனவல்ல நிஜம். 16 குழந்தைகளின் முதல் விமான பயணம்
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின், சென்னை டேபிளர் பிரவேஷ் ஜெயின், டேபிளர் யஷ்வந்த், மற்றும் கோவை டேப்ளர் ராகுல் ஆகியோர் இணைந்து, 5 ஆம் ஆண்டு,Flight of Fantasy மூலம் கோவையை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 16 குழந்தைகளை, வாழ்நாளின் முதல் விமான பயணத்தை மேற்கொள்ள உதவி அவர்களின் இதயத்தில் நீங்கா நினைவுகளை உருவாக்கியுள்ளனர்.
மறக்கமுடியாத நினைவுகளை ஏற்படுத்தும் நோக்கில், ரவுண்ட் டேபிள் 100 சென்னை, மற்றும் ரவுண்ட் டேபிள் 20 கோயம்புத்தூர் உறுப்பினர்கள் இணைந்து, 5 வது ஆண்டாக தொடர்ந்து “ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி” எனும் மனம் நிறைந்த சமூகப் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
2026 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூரைச் சேர்ந்த 16 பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு வாழ்நாளில் முதன்முறையாக விமானப் பயணம் அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இப்பயணம், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை தொடங்கியது. அங்கிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு மிகுந்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அளித்த முக்கிய தருணமாக இது அமைந்தது.
விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ( Phoenix Marketcity ) வணிக வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பல்வேறு விளையாட்டுகள், செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான மதிய நேரத்தை கழித்தனர். குழந்தைகளின் மகிழ்ச்சியும் உற்சாகமும் இந்நிகழ்ச்சியின் உண்மையான நோக்கத்தை பிரதிபலித்தது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடற்கரையின் இனிய சூழலில் சாந்தமாக ஓய்வெடுத்து, சென்னையின் உற்சாகமான சூழலை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒரே நாளில் பல நினைவுகளால் நிரம்பிய இந்த அனுபவப் பயணம், மாலை நேரத்தில் மீண்டும் கோயம்புத்தூருக்கு விமானம் மூலம் திரும்பியதன் மூலம் நிறைவு பெற்றது.
இந்த அர்த்தமுள்ள முயற்சி, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இணைந்து செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் 20 கோயம்புத்தூர், மற்றும் ரவுண்ட் டேபிள் 100 சென்னை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் சாத்தியமானது. பொருளாதாரத்தில் நலிவுற்ற குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் புதிய அனுபவங்களையும் வழங்கும் நோக்கில் இந்த அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இந்நிகழ்ச்சியையொட்டி, அமைப்பின் பிரதிநிதிகள், இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து, குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை விரிவுபடுத்த உறுதியாக உள்ளதாக தெரிவித்தனர்.
ரவுண்ட் டேபிள் 100 சென்னையின், டேபிளர் பிரவேஷ் ஜெயின் மற்றும் டேபிளர் யஷ்வந்த் ஆகியோர் குழந்தைகளை சென்னையில் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக குறிப்பிட்டனர். வணிகவளாக அனுபவத்திலிருந்து கடற்கரை வரையிலான ஒவ்வொரு தருணமும், அவர்கள் மறக்கமுடியாத ஒரு நாளை அனுபவிக்க உருவாக்கப்பட்டது என்றும், எங்கள் டேபிள்களின் இந்த இணைப்பு, சிறிய முயற்சிகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ரௌண்ட் டேபிள் 20 கோயம்புத்தூரின் டேப்ளர் ராகுல் குறிப்பிடுகையில் ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்பது,
வெறும் விமானப் பயணம் அல்ல என்றும், இது குழந்தைகளுக்கு புதிய வாய்ப்புகளின் உலகத்தை திறந்து வைக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். குழந்தைகளின் முதல் விமானப் பயணத்தின் உற்சாகத்தை காணும் போது, ஆண்டுதோறும் இந்த முயற்சியை மேற்கொள்ளும் நோக்கம் மேலும் வலுவடைவதாக கூறிய அவர், இது குழந்தைகளை பெரிய கனவுகளை காணத் தூண்டும் நினைவுகளை உருவாக்குகிறது என்றார் .

