11.3 C
New York
Monday, April 13, 2026

Buy now

காக்கா படம் எப்படி இருக்கிறது. கலாட்டா உண்டா?

 

காமெடியும் இருக்கிறது. காதலும் இருக்கிறது. கலாட்டாவும் இருக்கிறது. காக்கா விமர்சனம்
**

மதுரையில் நடக்க இருந்த ஹீரோயின் ரோஷ்மின் திருமணம் திடீரென ரத்தாகிறது. காரணம், மாப்பிள்ளையின் அடாவடிகள். விளைவு, ஹீரோயின், அவர் தங்கை சாய்தன்யாவை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் அவர் தந்தை. அங்கே மரம் நடும் சமூக ஆர்வலர் இனிகாவை ரோஷ்மின் காதலிக்க, அவர் தங்கை சாய்தன்யாவை சென்ட்ராயன் காதலிக்கிறார். இந்த காதல் கல்யாணத்தில் முடியலாம் என்ற நேரத்தில், மதுரையில் இருந்து அந்த மாப்பிள்ளை சென்னை வருகிறார். மீண்டும் ரோஷ்மினை டார்ச்சர் செய்கிறார். உன் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என அவருக்கு உதவுகிறார் டூபாக்கூர் அரசியல்வாதியான முனிஸ்காந்த். இதற்கிடையே, முனிஸ்காந்த் தங்கை மணிமேகலைக்கும், அந்த மாப்பிள்ளைக்கும் காதல் மலர்கிறது. கடைசியில் திருமண மண்டபத்தில் யாருக்கும், யாருக்கும் திருமணம் நடந்தது? பிரச்னைகள் எப்படி முடிந்தது என்பதை சுந்தர். சி பட பாணியில் காமெடி, காதல் கலாட்டா கலந்து எடுத்து இருக்கிறார் இயக்குனர் தேனி.கே.பரமன். அவரே அந்த அடாவடி திருமண மாப்பிள்ளையாகவும் வருகிறார்

சின்ன பட்ஜெட், புதுமுகங்கள், வளரும் கலைஞர்கள் நடித்த படம் என்றாலும் கல்யாண சீன், காதல் சீன், காமெடி சீ்னகள் படத்துக்கு பிளஸ். குறிப்பாக, கொஞ்சம் காமெடி கலந்த மதுரைக்காரராக வரும் தேனி கே பரமனின் நடிப்பு, அவரின் சேட்டைகள். ரோஷ்மினை திருமணம் செய்ய அவர் நடத்துகிற போராட்டங்கள், திட்டங்கள் செம இன்ட்ரஸ்டிங். மதுரையில் அவர் அடிக்கிற லுாட்டி, அவர் வீட்டு ஆயாவின் கிண்டல், சென்னை வந்து பூட்டிய வீட்டை திறக்க சொல்லி பண்ணுகிற ரவுசு, போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்குவது அருமையாக உள்ளது. அவரின் மதுரை ஸ்லாங், அந்த பாடிலாங்குவேஜ், காமெடியை ரசிக்க முடிகிறது. அவருக்கு உதவுகிற அரசியல்வாதியாக வரும் முனிஸ்காந்த், கொட்டாச்சி சம்பந்தப்பட்ட சீன் படத்தை கலகலப்பாக்குகிறது. கிளைமாக்சில் திருமண மண்டபத்தில் அவர் தவிப்பது, தங்கைக்காக உருகுவது சூப்பர். அவர் உதவியாளர் ரெட்டியாக வருகிற கொட்டாச்சி, டீம் நல்ல கூட்டணி

ஹீரோயின் ரோஷ்மின் அழகாக இருக்கிறார். பாடல்காட்சி, காதல் காட்சிகளில் கவர்கிறார். அவருக்கும் இனிகோவுக்குமான காதல் சீன் ஓகே. அவர் தங்கையாக வருகிற சாய்தன்யா துறுதுறுவென இருக்கிறார். அவரை காதலிக்க சென்ட்ராயன் போடும் திட்டம், கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அருமை. இதற்கிடையில் பெண் தேடி அலையும் வயதான ஆளாக கூல் சுரேஷ் அவ்வப்போது வந்து தமாசு பண்ணுகிறார். அவருக்கும் சென்ட்ராயனுக்குமான சீன் சிறப்பு. இவர்களை தவிர அப்புக்குட்டியும் தனது கேரக்டரில் நன்றாக நடித்து இருக்கிறார். ஹீரோயின் அப்பா, அம்மா கேரக்டர் இயல்பாக இருக்கிறது. போலீசாக வரும் மகாநதி சங்கர் வழக்கமான பாணியில் கலாய்க்கிறார். மதுரை, சென்னை போர்ஷன் இரண்டும் தொய்வில்லாமல் போகிறது

சுரேஷ்குமார் ஒளிப்பதிவு, கெவின் இசை படத்துக்கு பிளஸ் ஆக இருக்கிறது. சில காமெடி சீன்கள் வொர்க் ஆகவில்லை. சில காதல் சீன் இழுக்கிறது. ஆனாலும் சின்ன சின்ன காமெடி, நடிகர்களின் நடிப்பால் படம் போரடிக்கவில்லை. ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பது படத்தை கலர்புல்லாக்கி இருக்கிறது. நம்பி வந்தால் நல்லா சிரித்துக்கொண்டு போகலாம். தானே இயக்கி, தானே நடித்து காக்காவை பக்காவாக கொடுத்து இருக்கிறார் தேனி.கே.பரமன். வெளிநாட்டில் இருந்தபடியே படத்தை தயாரித்து இருக்கிறார் ரேணுகா கிருஷ்ணசாமி

 

 

Related Articles

Latest Articles